முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
எதற்கும் எல்லாவற்றிற்கும் ஒரு உத்தி –எல்லை உண்டே! இவருக்கும் அந்த எல்லை –ஆண் வாரிசு (மகன் கதிரவன்) பிறந்ததும் உருவாயிற்று.
சீட்டு –பைனான்ஸ் என்று நடத்தும் போது பணத் தேவை உள்ளவர்கள் ஓடிவந்து கெஞ்சுவார்கள். உதவணும் என்பார்கள். பணம் பெற்று வாழ்த்திச் செல்பவர்கள் வட்டியும் அசலும் திருப்பித் தரும் போது சங்கடப்படுவர். சபிப்பர். மனம் நொந்து வட்டி தரும் போது பிரச்சனை.
இனி வட்டித் தொழிலே வேணாம் என இவர்களை முடிவெடுக்க வைத்தது. பிறரின் நம் வாரிசுகளைப் பாதிக்கும் என யோசித்தனர்.
இனிக் கூட்டு தொழில் வேணாம். சொந்தத் தொழில் போதும் –லாபமோ நஷ்டமோ சின்ன அளவிலேயே இருக்கட்டும் என முடிவு செய்து பணப் பட்டுவாடாக்களைப் பைசல் செய்தார்.
நொச்சியம் கந்தசாமி உடையார் நட்பு கிடைத்தபின், இவரும் அவரைப் போல் முருகபக்தராக மாறினார். அதன் பிறகு எந்த ஒரு காரியம் ஆரம்பிக்கும் முன்பும் அருகிலுள்ள செட்டிக்குளம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது –வரம் கேட்பது இவரது வழக்கமாயிற்று.
செட்டிக்குளம் –பெரம்பலூர் –திருச்சி சுற்று வட்டத்தில் பிரபலம் –பழனி போல மலை மேல் முருகன்! பண்டிகை –விசேஷங்களில் இங்குக் கூட்டம் அள்ளும்!
பைனான்ஸ் விட்ட பின்பு வேறு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது –சினிமா தியெட்டர் ஆரம்பிக்கலாம் –பால் பண்ணை நடத்தலாம் என இரு வழிகள் தோன்றின.
இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்கிற குழப்பம். வழக்கம் போல செட்டிக்குளம் முருகனிடம் சீட்டு எழுதிப்போட –பால் பண்ணை ஆரம்பிக்கும்படி உத்தரவு வந்தது.
பெரம்பலூரைச் சுற்றின கிராமங்களில் –குறிப்பாய் புதுநடுவலூர், ஆலம்பாடி, ரெங்கநாதபுரம் பகுதிகளில் –வசதியில்லாமலிருந்த விவசாயிகளுக்கு மாடு வாங்கப் பணம் கொடுத்தார். வட்டியில்லாக் கடன் என்பதால் பலரும் அதற்கு ஆர்வம் காட்டினார்.
மாடு வளர்த்தவர்களிடம் –இவரே பால் கொள்முதல் செய்ய ஆரம்பித்தார். அதுவும் –சொசைட்டியைவிட அதிக விலை கொடுத்து! அதனால் ஊர் மக்களுக்கும் மகிழ்ச்சி. வருவாய் வருவதில் அவர்களும் வளர்ந்தனர்.
இதுதவிர –இவரும் மாட்டுப் பண்ணை ஆரம்பித்து இன்றுவரை நடத்தி வருகிறார். அதில் 250 மாடுகள், ஆட்கள் என அந்தத் துறையும் தொடர்கிறது.
பால் பண்ணையில் இப்போது இவருக்கு அவ்வளவு லாபம் இல்லை. ஆனாலும்கூட தங்களை வளர்த்த –வளர்ச்சிக்கு உதவின அந்தத் தொழிலை விட்டுவிடக் கூடாது எனச் செய்கின்றார்.
எப்படியும் கல்லூரிக்கும் –ஹோட்டலுக்கும் பால் பெரிய அளவில் தேவை. அவற்றை வெளியே வாங்கும்போது தரமானதாய்க் கிடைப்பதில்லை. தரமான பால் நம் பண்ணையிலிருந்தே வரட்டுமே என்பதும் கூட பால் பண்ணை நடத்துவதற்கு இன்னொரு காரணம்.
(10)
சீனிவாசன், மகன் மகள்கள், மருமகன்கள் எல்லோரும் இப்போதும் கூட்டுக்குடும்பம்தான். எந்த முடிவு அல்லது புதுத் தொழிலில் இறங்கினாலும் வீட்டில் அனைவரிடமும் விவாதித்துதான் செயல்படுவார்.
ஒரு முடிவு எடுத்துவிட்டால் பிறகு அதிலிருந்து பின் வாங்குவதில்லை. அதை வெற்றி பெற வைக்காமல் விடுவதில்லை.
வீட்டில் மகள்கள், மகனின் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் தன்னிறைவு ஏற்பட்டிருந்தது. முன்பு ஆரம்ப காலங்களில் இவர் மட்டும் தனி, எல்லாவற்றையும் தனியாகச் சுமக்க வேண்டும்.
இப்போது பிள்ளைகளெல்லாம் ஆளாகிவிட்டதால் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை, அதனால் அடுத்தடுத்து என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்கிற சிந்தனை எழுந்தது.
பெரம்பலூரில் குறிப்பிடும்படி தங்குவதற்கு லாட்ஜ்கள் இல்லாமலிருந்தன. நல்ல வசதியுடன்கூடிய லாட்ஜ் கட்டலாமா என் யோசனை ஓடிற்று. அந்தச் சமயம் நண்பர்கள் பலரும் –பெரம்பலூர் பகுதியில் நல்ல பள்ளி –கல்லூரிகள் இல்லை. புதிதாய்த் துவங்குங்களேன் எனத் தூண்டினர்.
அது ஐயாவுக்கும் சரியெனப்பட்டது.
நாம்தான் படிக்க முடியலை. வசதி வாய்ப்பு இல்லாமல் என்னை மாதிரிப் படிக்க முடியாதவர்கள் இந்தப் பகுதியில் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் உதவக்கூடாது என்று நினைத்தார்.
கல்வித்துறை நமக்கு வேண்டாம் என் வீட்டுக்குள்ளே எதிர்ப்புக் கிளம்பிற்று. வீட்டில் யாரும் கல்வி பெற்றவர்கள் இல்லாத போது அவற்றை நிர்வாகிப்பது யார்? பெரும் முதலீடு போட்டு அடுத்தவர்களை நம்பி ஆரம்பிக்க வேண்டாம். தெரிந்த தொழில் இறங்குகள் என்றனர்.
யோசித்துப் பார்க்கும்போது ஆரம்பம் முதலே சீனிவாசன் தனக்குத் தெரிந்த தொழில் என்று எதிலும் இறங்கினதில்லை. விவசாயம் முதல், சைக்கிள் கடை, டீக்கடை, பஸ், மதுக்கடை, பைனான்ஸ், சீட்டு, பால் பண்ணை என்று அவற்றில் இறங்கின பின்புதான் கற்றுக் கொண்டிருக்கிறார்.
முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமில்லை. முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம். எந்தத் தொழில் என்றாலும் அதற்கு ஏற்ற –திறமையான –விசுவாசமான –தகுதியுள்ள நபர்களைப் பொறுப்பில் அமர்த்திவிட்டால் சிறப்பாகச் செய்யமுடியும் என இவர் நம்பினார்.
நல்ல ஆலோசகர்களை அருகில் வைத்துக் கொண்டால் நிர்வாகம் சிறப்பாக நடக்கும் –நடத்தலாம் என்பது இவரது அனுபவம்.
கல்வித் துறைக்கும் வீட்டில் எதிர்ப்பு வர வர -இவருக்கு அதில் இறங்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுந்தது. படிப்பு இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை எதற்கு? படித்தா இத்தனை துறைகளில் வென்றேன்? படிப்பு இல்லை என்று சொல்லி ஏன் என் திறமையைக் குறைந்து மதிப்பிட வேண்டும்?.
முடியும் –என்னால் முடியும் –சாதிக்கணும் –சாதித்துக் காட்டணும் –காட்டுவேன்!
கல்வி என்பது களவு போகாதது. வெள்ளம் –புயல் –மழை –வறட்சி –காற்று –தீ என்று எதுவும் அழிக்க முடியாதது. மனிதனை முழுமையாக்குவது. பணம் –காசு –உணவு –உடை –வீடு –வயல் –வரப்பு –சொத்து சுகங்கள் வரும்- போகும். இவை எல்லாம் அழிந்து போகக் கூடியவை.
இவ்வுலகில் அழியாத ஒரே செல்வம் கல்விதான்! அதற்கு நாம் பாடுபடுவோம் என்று களத்தில் இறங்கினார்.
அதற்கு எஜீகேஷன் டைரக்டராக இருந்த திரு.சுந்தர் ஐயர் ``தைர்யமாய் களத்தில் இறங்குங்க, பள்ளி ஆரம்பிக்க வேண்டிய ஏற்பாடெல்லாம் நான் செய்து தரேன்’’ என்று துணையாக இருந்தார்.
புத்தனாம்பட்டி பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்ற திரு.சி.வெங்கடாஜலமும், புதுக்கோட்டை திரு.பி.எஸ் கருப்பையாவும் ஊக்கம் தந்து செயல்பட வைத்தனர்.
பள்ளி ஆரம்பிக்க –அனுமதிக்க வேண்டி ரூ.500 சலான் மதுரை அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்றனர். பள்ளி ஆர்மபிக்க வேண்டும் என்கிர ஆர்வம் இருந்ததே தவிர, அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், யாரைப் போய் –எப்படிப் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் சீனிவாசனுக்குத் தெரியாது.
அடிமட்டத்திலிருந்து எதிர்ப்பை மீறி வளர்ந்து வந்தாயிற்று ஓரளவிற்கு வசதி பெற்றாயிற்று. இனி எதற்காகப் பயப்படணும்? யாருக்கும் நாம் அடிமையில்லை. அடிபணிய வேண்டியதில்லை நேராய் போ! நேராய் வா! எதையும் சொந்தமாய்ச் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை சற்று இறுமாப்பையும் தந்திருந்தது.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சீனிவாசன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக