முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
தனது திட்டம் பிசிறாமல் தடையில்லாமல் நிறைவேற வேண்டும் என்பதற்காக அன்று மாலை களப்படச்சாய் சாமி கோயிலிற்குச் சென்றார். எந்த ஒரு காரியத்தில் இறங்குமுன்பு அவர் அங்கே போய் வரம் கேட்பதுண்டு. அதுமாதிரி அன்றும்! கையில் பிச்சுவாக்கத்தி; மனதில் கொலை வெறி!
சூடம் ஏற்றிச் சாமி கும்பிடலாம் என்று பார்த்தால் சூடம் எரியவேயில்லை. ஒரு தீப்பெட்டி –அதுவும் புதிது –குச்சிகள் பற்ற வைத்து பற்ற வைத்துச் சூடம் ஏற்றினாலும் எரியவில்லை. இத்தனைக்கும் காற்றுக் கூட இல்லை. அப்படியும் அணைந்து போயிற்று. அவருக்கு எதுவும் புரியவில்லை. கோபம்.அந்தச் சாமி மேலும்! இந்தச் சாமியும் கூட தனக்கு எதிராய்ச் செயல்படுகிறேதே –வேணாம் –நீ வரம் தரவேணாம் –எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், இனி பின்வாங்குவதாயில்லை என்று சோளக்காட்டுக்கு விரைந்தார்.
மாலை மறைந்தது. இருள் பரவியது, மேய்ச்சலுக்குப் போன ஆடு, மாடுகளெல்லாம் திரும்பின. சீனிவாசன் சோளக்காட்டில் காத்திருந்தார்.
சோளக்காடு செழித்துத் தட்டை தட்டையாய் வளர்ந்திருந்தது. அதனால் கதிர்கள் காற்றில் படபடத்தன. வெளியே தென்றல் ஆனால் உடலில் புழுக்கம்.
காத்திருந்தார்.
கத்தியை எடுத்துக் குறி பார்த்துக் கொண்டார். அந்நாள் அங்கே வருவான் –வரப்பை கடக்கும் போது பின்னாலிருந்து ஒரே குத்து! அவன் அலறிக் கொண்டு விழுவான் –நாம் ஒரே ஒட்டம்!
எல்லாவற்றிற்கும் தயார்! ஒத்திகை பார்த்தாயிற்று, புல்வெளியில் அமர்ந்திருக்கப் பொறுமையில்லை. எறும்பு கடித்தது, வெட்டுக்கிளைகள் பறந்தன. கொசுக்களின் மொய்ப்பு!
இன்னும் அந்நாளைக் காணவில்லையே.... எங்கே போய் ஒழிந்தான்?
நேரம் ஆக ஆக அவருக்குப் பதறிற்று, எவ்வளவோ கஷ்டப்பட்டோம். உழைக்கிறோம். முயற்சியுடன் பாடுபட உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும் போது இது தேவையா? பிரச்சனைக்குக் கொலை ஒன்றுதான் தீர்வா –என்று யோசனை ஓடிற்று.
அதைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்தார். முடிவெடுத்தாயிற்று. இனி எக்காரணம் கொண்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது!
அப்போது ஒத்தையடிப்பாதையில் சலசலப்புக் கேட்டது. அவன்தான்! இதோ வருகிறான்! வந்துவிட்டான் ! சைக்கிள் வரப்பைக் கடக்கிறது.
ஒரே பாய்ச்சல்!
கத்தியை ஓங்கிக் கொண்டு பாயப் போன போது –
சைக்கிளின் முன் பகுதியில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. அவருடன் ராஜ் ரெட்டியார் பேசிக் கொண்டு வர –
சீனிவாசனுக்கு வெறுப்பாயிற்று. இந்நாள் தனியாய் வருவான் என்று பார்த்தால் –துணைக்கு ஆள்!
முன்பக்கம் அமர்ந்திருந்தது வேறுயாருமில்லை. அந்த ஊர் முன்சீப் நொச்சியம் கந்தசாமி உடையார்! ரொம்ப நல்ல மனிதர் சீனிவாசனுக்கு மிகவும் பிடித்தவர்.
அவரை வைத்துக் கொண்டு கொலை செய்யத் துணிவு வரவில்லை. சட்டெனப் பின்வாங்குகிறார். முன்சீப் தன்னைப் பார்த்துவிடக் கூடாது எனப் பதுங்கினார். ராஜ் ரெட்டியார் சைக்கிள் மிதித்த கவனத்தில் இவரைப் பார்க்கவில்லை. ஆனால் முன்சீப் பார்த்துவிட்டார்!
சீனிவாசனுக்கு வெலவெலத்துப் போயிற்று, காரியமும் நடக்கவில்லை, தேவையில்லாமல் அவர் வேறு பார்த்துவிட்டார் என வெறுத்துப் போய்த் திரும்பினார். தோல்வி!
அந்தத் தோல்வியை அவரால் ஏற்க முடியவில்லை. சீரணிக்க முடியவில்லை. அதைப் போக்கிக் கொள்ளவும் சமாதானம் தேடவும் மறுபடியும் களப்படச்சாய் சாமி கோயிலுக்குப் போனார். சே! என்ன இப்படிப் பண்ணிவிட்டாய்! சாமியே... நான் எது செஞ்சாலும் உன்னிடம் வரம் பெற்றுத்தானே செய்வேன்!
எல்லாக் காரியத்திலும் துணையிருக்கும் நீ –இதில் காலை வாரி விட்டாயே –இது நியாயமா?
கோபத்துடன் பாக்கி இருந்த தீக்குச்சியை உரசிப் பற்ற வைக்க என்ன ஆச்சர்யம்!
சூடம் இப்போது நன்றாக எரிந்தது. அந்த வெளிச்சத்தில் சாமி அவரைப் பார்த்துப் புன்னமைப்பது போலிருந்தது. இத்தனைக்கும் அப்போது பயங்கரக் காற்று! இருந்தாலும்கூட சூடம் அவரை ஏளனம் செய்கிற மாதிரி எரிந்து கொண்டிருந்தது.
சாமிக்கே தன் செயல் பிடிக்கவில்லை என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது. தன் நல்ல செயல்களுக்கெல்லாம் துணையிருந்த சாமி – தீய செயலுக்குத் துணை வராமல்–பழி–பாவத்திலிருந்து காப்பாற்றியிருப்பது அப்போது அவருக்குப் புரிந்தது.
(7)
சீனிவாசன் பயந்தது போலவே முன்சீப் நொச்சியம் கந்தசாமி மறுநாள் அவரைப் பிடித்துக் கொண்டார். தனியாய் அவரை அழைத்துப் போய் ``நேற்று நீ செய்யவிருந்த காரியத்தின் வீரியத்தை உணருவாயா...?’’
``வேறு என்னங்க செய்வது? என்னை துரத்தித் துரத்தி அடிக்கிறார். வாழவிடமாட்டார் போலிருக்கு.”
`` அதுக்காக? கொலை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்? அந்த நேரத்திற்கு உனக்கு அது சரியாய் படலாம். அதன் பின் விளைவுகள் பற்றி சிந்தித்தாயா? அவர் செத்திருந்தால் விசாரணை வரும். முன்சீப் என்கிற முறையில் நான் பதில் சொல்லியாகணும். நான் என்ன சொல்ல? பார்த்ததைச் சொல்ல? பார்த்ததைச் சொன்னால் உனக்குப் பிரச்சனை. சொல்லாவிட்டால் என் மனசாட்சி என்னைக் கொல்லும்.’’
``அதுதான் காரியத்தைக் கெடுத்துட்டீங்க. அந்நாளும் தப்பிச்சுட்டானே! அப்புறம் என்னவாம்?’’
``தப்பிச்சுட்டார். ஒரு வேளை நீ அவரைக் குத்தியிருந்தாலும் - ஆள் பிழைத்துக் கொண்டாலும் உனக்கும் பிரச்சனை, எதுக்கு இதெல்லாம்? உன் மேல் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. மதிப்பு உண்டு. சின்ன வயதிலேயே குடும்பத்தைச் சுமக்கிறாய். கடுமையாய் உழைக்கிறாய். அது மட்டும் போதாது மனிதனாகவும் நீ மாற வேண்டும்!’’
``இப்போ மட்டும் என்ன மிருகமாக இருக்கேன்?’’
யோசிச்சுப் பார்! ஏறக்குறைய அதே நிலைமைதான் உனக்கு. உழைக்கிறேன் –கஷ்டப்படறேன் என்கிறாய். மாடு கூடத்தான் உழைக்கிறது. கஷ்டப்படுகிறது. கோபம் வந்தால் எதுவும் யோசிக்காமல் சீறிப்பாய்கிறது. முட்ட வருகிறது. நீயும் அதுவும் ஒன்றா? ஒன்றுதானா –யோசி! கோபம் வரணும். வரலாம். தீயதைக் கண்டு ஆவேசப்படலாம். ஆனால் நிலை தடுமாறக் கூடாது! மனதை ஆளக் கற்றுக் கொள்ள வேண்டும். அடக்கணும்.
வன்முறையும், கொலையும் எதற்கும் தீர்வல்ல, ஆழ்ந்து யோசித்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். பேசித் தீர்த்துக் கொள்ளலாம்!’’
``பேசியாயிற்று, பிரயோஜனமில்லை. இனித் தீர்க்க வேண்டியதுதான் பாக்கி!’’
``சீனிவாசா! உன் கோபம் இன்னும் அடங்கவில்லைன்னு தெரியுது’’
``அடங்காதுங்கய்யா!’’
``````அடங்கணும். உனக்கு நானிருக்கேன். என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?’’
``இருக்கு.’’
``அப்போ என் பேச்சைக் கேளு. நான் ராஜ் ரெட்டியாரிடம் பேசிச் சரி பண்றேன். அவர் உன் வழில குறுக்கிடாம இருந்தாப் போதுமில்லே!’’
தொடரும்...
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக