தி.மு.க வை அழிக்க எந்த கொம்பனும் தேவையில்லை...
தேர்தல் தோல்விக்கு பிறகு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அங்கு அவர் பேசிய கருத்துகளும், அதற்கான நம் விமர்சனங்களும் இங்கே. முதலில் இப்படி சொல்கிறார்.
" அந்த ஆட்சி வெளியிட்ட ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதை அச்சுப்பிழையின்றி தயாரிக்கக்கூட இந்த ஆட்சியால் முடியவில்லை. அதில் பேரறிஞர் என்பது பேராறிஞர் என்று அச்சிட்டுள்ளனர்." அதாவது, தமிழ் கொலை செய்யப்பட்டதை பார்த்ததும் பொங்கி எழுகிறார். பல்லாயிரம் தமிழர்களின் கோர மரணத்தையே பார்த்துவிட்ட எங்கள் தமிழ்த்தாய், இந்த ஒரு காலுக்காக கோபித்து கொள்ள மாட்டார். பேராறிஞரும் கோபித்து கொள்ள மாட்டார்.
தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது பார்த்து கொண்டு சும்மா இருந்ததை விட இந்த தமிழ் கொலை ஒன்றும் உங்களுக்கு மோசமில்லை கலைஞர் அவர்களே. தமிழர்களை காப்பாற்ற முடியாத நாம் தமிழுக்காக பொங்குவது வேடிக்கை. "ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன், மோனோ " என்று பேரன்கள் வைத்த பட நிறுவனத்துக்கு நல்ல தமிழ் பெயர் வைக்க யோசிக்கலாம் - சும்மா இருக்கும் நேரத்தில்.
அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வருகிறார். "புதிய ஆட்சி ஏற்பட்டும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ரவுடியிசம் நடைபெற்று வருகிறதே? எந்த ஆட்சியிலும் இது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுத்து பாதுகாக்கத்தான் காவல் துறை இருக்கிறது. திமுக ஆட்சியை விமர்சித்து எழுதிய நாளேடுகள், வார ஏடுகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன" என்கிறார். உண்மை தான்.
கொலை, கொள்ளையை எந்த ஆட்சி வந்தாலும் தடுக்க இயலாது தான். காரணம் - வறுமை உள்ளவரை எப்படி இலவசங்கள் தொடரும் என்று சொன்னீர்களோ - அதே மாதிரி வறுமை உள்ளவரை திருட்டுத்தனமும் இருக்கும். ஆனால் ஆளுங்கட்சியின் பெயரை பயன்படுத்தி கொண்டு ரவுடித்தனம் செய்யும் தொ(கு)ண்டர்கள் இனி இருக்க மாட்டார்கள். அதனால் ரவுடியிஸம் குறித்து மக்கள் ஐந்து வருஷத்திற்கு கவலைப்பட தேவையில்லை.
காவல்துறை - தங்கள் ஆட்சியில் தி.மு.கவின் கைப்பாவையாக இருந்தது அல்லது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்தது. (தினகரன் அலுவலக எரிப்பு, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் போதுமே) இன்று நிலைமை என்னவென்றால் "அ.தி.மு.க கட்சி பெயரை கிரிமினல்கள் பயன்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு பரிந்து பேசும் அ.தி.மு.க கட்சிகாரர்களும் - கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" எனும் தலைமையின் எச்சரிக்கை பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அல்லக்கைகளை கட்டுப்படுத்தினாலே பாதி குற்றம் குறைந்துவிடுமே.
அடுத்து சென்ற ஆட்சியில் தி.மு.க குண்டர்களால் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய ஆளுனர் உரையை இப்படி சொல்கிறார். "கடந்த ஆட்சியில் பயமுறுத்தி சேர்க்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் சேர்க்கப்படும். அதற்கென புதிய சட்டம் இயற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர் நிலமும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படுமென நம்புகிறேன்." சிறுதாவூர் நிலம் மிரட்டி வாங்கப்பட்டதா? இது குறித்து ஜெ யின் விளக்கம் இங்கே.
பஞ்சமர் நிலம் பற்றி இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். சாமானியர்கள் யாரும் அரசின் சட்டத்துக்கு புறம்பாக, பஞ்சமர் நிலம் என்று சொல்லப்படும் இடங்களை வாங்க விரும்புவதில்லை. தெரியாமல், பொய்யான தகவல்கள் மூலம் ஏமாற்றப்படக் கூடும். அரசு, பத்திர அலுவலகத்தில் பஞ்சமர் நிலம் குறித்த தகவல்களை மக்களுக்கு முழுமையாக அறிய தர வேண்டும். சொத்து வாங்கும்போது பார்க்கப்படும் வில்லங்கம் - சம்பிரதாயத்துக்கு, கடனுக்கு பார்ப்பதாய் இருக்கக்கூடாது.
தமிழகத்தில் சாமானியர்கள் பலர், பஞ்சமர் நிலம் என்று தெரியாமல் அவர்களிடம் நிலம் வாங்கி விட்டு - பிறகு அது பஞ்சமர் நிலம் என்று தெரிய வந்து தங்கள் நிலத்தினை இழக்கின்றனர். (பஞ்சமர் நிலம் குறித்து முழுமையாக தகவல் அறிய இங்கே) மேற் சொன்னவற்றுக்கும் - ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி - அடாவடித்தனமாக ஏழைகளிடம் நிலத்தை பறிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சிறுதாவூர் நிலம், யாரையும் மிரட்டி அபகரிக்கப்பட்டதல்ல.
பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்தது. கடைசியாக தான் தெரிந்துள்ளது பஞ்சமர் நிலமென்பது. அது குறித்த மேலதிக விபரம் இங்கே. சட்டம் தன் கடமையை செய்யட்டும். அபகரிக்கப்பட்ட நிலமாயின் யாராயினும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டவர்களே. எதிர்காலத்திலாவது பஞ்சமர் நிலம் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான தகவல் - பத்திர அலுவலகத்தின் மூலம் அரசு உதவ வேண்டும். அப்போது தான் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும். அண்ணா அறிவாலயம் கட்டப்பட்ட இடம் கூட பஞ்சமர் நிலமே என்று ஒரு சர்ச்சை உள்ளதே. அம்மாவுடன் கூட்டணி வைத்த போது, தோழர் தொல். திருமாவே இது பற்றி பேசினாரே.
அடுத்ததாக தமிழை பற்றி கவலைப்பட்டு இப்படி கேட்கிறார். "தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செம்மொழி மைய அலுவலகம், நூலகம் ஆகியவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுதான் தமிழை உலகறியச் செய்யும் செயலா" . என்கிறார்.
நீங்கள் செம்மொழி மாநாடு நடத்திய மாதிரி, அம்மா உலக தமிழ் மாநாடு நடத்தினால் போதுமே. தமிழ் உலகம் முழுக்க பரவிவிடாதா? தமிழின் பெருமையை விட, தமிழின் மூலம் தம் பெருமையை பறைசாற்ற தானே விரும்புகிறிர்கள். அதற்கு தானே செம்மொழி மாநாடு, உலகத்ததமிழ் மாநாடு... தமிழை பற்றி என்ன கவலை, தமிழனை பற்றி என்ன கவலை. மேலும் சொல்கிறார்,
"சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி திராவிட இயக்கக் கொள்கைகளை, லட்சியங்களை கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும்." என்று. கலைஞர் அவர்களே, சஸ்பென்ஸ் தாங்கவில்லை. இப்போதாவது திராவிடத்தின் கொள்(கை)ளை, லட்சியங்கள் என்னவென்று சொல்லி விடுங்கள்.
கடைசியாக சொல்கிறார், "திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது" என்று. கொம்பன் வந்து அழிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களே திமுக வை அழிக்க போதுமானவர்கள். எப்படி பிற கட்சிகளை நீங்கள் அழித்தீர்களோ, அதே மாதிரி - இப்போது உடைக்க எந்த கட்சியும் கிடைக்காததால் - பழக்க தோஷத்தில் உங்கள் கட்சியையும் நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக