புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 5

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



சீனிவாசனுக்கும் அவளுக்கும் காதல் என்றும் –இருவரும் ரகசியமாய்ச் சந்திருக்கிறார்கள் –ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் வதந்தி பரவிற்று.

சீனிவாசனுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் அவளிடம் இல்லை. ஆனால் ரெட்டியார் அதை நம்பவில்லை. பாரம்பர்யப் பணக்காரரான அவருக்குக் கெளரவப் பிரச்சனை.

நேற்று முளைத்தவனுக்குத் தன் மகள் கேட்கிறதா என்று கோபம் ஆவேசம், அதைச், சுற்றியுள்ள சோம்பேறி வட்டமும் ஏற்றிவிட்டது அவர் மகள் மறுப்பதையோ, சீனிவாசன் கெஞ்சுவதையோ பொருட்படுத்தவில்லை.

அக்கம் பக்கம் ரெங்கநாதபுரம், பாளையம் , தம்பிரான்பட்டி போன்ற இடங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துக் கடையை அடித்து நொறுக்கினார். சீனிவாசன் குடியிருந்த வீடும் இருந்த இடம் தெரியாமல் சேதப்படுத்தப்பட்டது –எரிந்து சாம்பலாயிற்று.

பாடுபட்டு வளர்த்த்தெல்லாம் ஒரே நாளில் போயிற்று. வாக்குத் தவறாதவன் என்கிற பெயரும், நாணயமும் கெட்டுப் போனது, உடமைகள் போனது மட்டுமின்றி அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை.

சீனிவாசனுக்கு எதிராய் மக்களைத் திரட்டினார். ஊரில் யாரும் இவருடன் பழகக்கூடாது எனக் கட்டளை. மீறினால் அவர்களுக்கும் மண்டகப்படி! சீனிவாசனுக்கு சைக்கிள் தரக்கூடாது, கடைகளில் சாமான்கள் தரக்கூடாது என இவரை ஒதுக்கி வைத்தனர். அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலைமை!

எத்தனை நாள் தான் பட்டினியாய் இருக்க முடியும்? பாட்டிதான் இவருக்கு அப்போது ஆறுதல், ``எதுக்கும் கவலைப்படாதே. மனம் தளராதே! எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும் அமைதியாயிரு!’’ என்று தேற்றுவார்.

எப்படி....? எப்படிப் பாட்டி முடியும்? நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணினேன்? எதுக்காக எனக்கு இந்தத் தண்டனை? அந்தப் பொண்ணை நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. செய்யாத தப்புக்கு எதுக்காக நான் அடிபடணும்?

முன்பு வசதியில்லாதப்போ –இல்லாத கொடுமையைப் பொறுத்துக்க முடிஞ்சது. கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சு, ஓரளவுக்கு வளர்ந்தபின்பு சம்பந்தமேயில்லாமல் அழிந்து போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவரால்.

பாட்டிக்கு அவரது வருத்தம் புரிந்தது. சீனிவாசன் அங்கே இருக்கும் வரை பிரச்சனைதான். ராஜ் ரெட்டியாருக்கு அவரைப் பார்க்கப் பார்க்க கோபம்தான் எழும். தான் இத்தனை மிரட்டியும்கூட ஊரிலேயே இருக்கிறானே என்கிற ஆத்திரம் எழும். அவருக்கும் கெளரவப் பிரச்சனை.

எல்லாம் இழந்தபின்பு அங்கே இருப்பதில் அர்த்தமில்லை. எந்தப் பிரயோஜனமும் இல்லை. அங்கே இருக்கும் தோறும் பிரச்சனைதான். இரண்டு பக்கமும் புகைச்சல், வைராக்கியம் எழும்.

ராஜ் ரெட்டி யார்க்குப் பணபலம், ஆள் பலம் இருக்கிறது. பேரனுக்கு அவை இல்லாவிட்டாலும் கூட இளம் ரத்தம் சட்டென ஆவேசப்பட்டு மடத்தனமாய் ஏதாவது செய்துவிடக் கூடாது. காலம் வலிது, காலம், காயத்தை ஆற்றும், இரண்டு பக்கமும் கோபத்தைத் தணித்து இயல்புக்குக் கொண்டு வரும். அதற்கு முதல் தேவை – சீனிவாசன் ஊரைவிட்டுப் போவதுதான் எனப் பாட்டி முடிவெடுத்தார்.

சீனிவாசனைப் பக்கத்துக் கிராமமான பெரகம்பிக்கு அவரது பெரியம்மா வீட்டுக்கு அனுப்பினார். சீனிவாசன் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அங்கு வியாபாரம் பார்த்தார். ஆனாலும் கூட சுழி விடவில்லை. மனது அங்கே லயிக்கவில்லை.

எத்தனை சமாதானப்படுத்தினாலும் கூட மனது ஆறவில்லை. பழையதை மறக்க முடியவில்லை. காலம் காயத்தை ஆற்றவில்லை. தீயை அணைக்கவில்லை. அதற்குப் பதில் அதிகரிக்கவே செய்தது.

அவர்கள் வசதி படைத்திருக்கலாம். பலம் பெற்றிருக்கலாம், இதெல்லாம் இவர்கள் மூதாதையர்கள் சம்பாதித்தது. இதில் அவர்கள் பங்கு என்ன? தண்டச்சோறுகள்! உழைப்பில்லை. கஷ்டப்படலை, சொகுசை அனுபவிப்பவர்களுக்குப் பிறர் கஷ்டம் புரியாது, தெரியாது.

நான் உண்டு என் தொழில் உண்டு என்றிருக்கிறேன். ராஜ் ரெட்டியாரே.... உன்னிடம் வந்தேனா? உன் விஷயத்தில் தலையிட்டேனா?

என் மேல் கைவைக்க உனக்கென்ன அதிகாரம்? உரிமை? எளியவன் என்பதாலும் கேட்க ஆளில்லை –நாதியில்லை என்பதாலும் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? செய்வாயா?

ஊரில் நீ மட்டும்தான் வாழணுமா? உனக்கு மட்டும் ஊர் சொந்தமா? பணம் இருந்தால் அதை உன் வீட்டில் வைத்துக் கொள். உன் பணத்தால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லை. காலணா அடுத்தவர்களுக்குக் கொடுக்காத உனக்கு எதற்காகச் செல்வாக்கு? ஊர் எதற்கு உனக்குப் பயப்பட வேண்டும்?

உள்ள செல்வம் –செல்வாக்கை வைத்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டும். ஆக்கத்திற்குப் பாடுபடவேண்டும். அதைவிடுத்து அழிக்கக் கிளம்புகிறாயே நீ மனிதனா?

நான் வளர்கிறேன் என்றால் நேர்மையாய் உழைக்கிறேன். செயல்படுகிறேன், அது உனக்குப் பொறுக்கவில்லை. யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு பெற்ற மகளையே சந்தேகிக்கிறாய். நீ சரியாயிருந்தால் மகள் எப்படி உன்னை மீறுவாள்? அவளும் அடங்கித்தான் கிடக்கிறாள். எனக்குத் தேவை என்றால் –நான் விரும்பினால் உன் மகளைத் தூக்கிக் கொண்டு போக எவ்வளவு நேரமாகும்?

தூக்கிப் போய் தாலி கட்டிவிட்டால் அப்புறம் என் கெளரவம் என்னாகும்? என்னை நீ தண்டிக்கலாம், அப்புறம் அதன்பின் என் மகளின் எதிர்காலம் என்னாகும்?

நான் நிஜமாலும் உனக்குப் போட்டி என்றால் நேருக்கு நேர் நின்றுபார்!

நான் உன்னைப் போட்டியாக நினைக்கவில்லை. எனக்குப் போட்டி என்று எவருமில்லை. அப்படி நினைக்க வேண்டிய அவசியமும் அவகாசமும் இல்லை. வசதியிலோ –வயதிலோ –அனுபவத்திலோ உன் அளவிற்கு இல்லாத என்னைப் பார்த்து எப்படிப் பொறாமைப் படலாம்? வயிறு எரியலாம்?

போட்டிக்கு ஒரு தகுதி வேண்டும். போட்டியாளருக்கு நாகரிகம் இருக்கவேண்டும். அது இல்லாத போது என் செல்வாக்குக்கு என்ன அர்த்தம்? என்ன விலை?

சீனிவாசனின் மனது உழவ ஆரம்பித்தது. என்னைக் கட்டுப்படுத்தவும், ஒதுக்கி வைக்கவும் அவர் யார்? நான் ஏன் அவருக்கு அடங்க வேண்டும்?

நெஞ்சு எகிறிற்று, ரத்தம் சூடேறிற்று. யாருக்கோ பயந்து ஏன் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்? என் பயம் கடவுளிடம் மட்டும்தான். நியாயமாய் நடக்கும்வரை கடவுள் எனக்குத் துணையிருப்பார். நான் அவர் முன்னிலேயே வளர்வேன். இனி என்ன வந்தாலும் சரி, பயப்படப் போவதில்லை. போராடு! மறுபடியும் குறுக்கே வந்தால்....

வந்தால்....

சீனிவாசன் வெகுண்டெழுந்தார்.

ஏதோ ஒரு வேகம் எழ –சீனி சும்மா கிடந்த பெரகம்பிக் கோயில் நிலத்தை ஏலத்தில் குத்தகைக்கு எடுத்தார். அப்போது வைகாசி மாசம், காற்றடி நாள், வறட்சி. இருந்த தண்ணீரை வைத்து நஞ்சை பயிரிடக் கிளம்பினார்.

(5)

நஞ்சை, மழைக்காலத்தில்தான் பயிரிட முடியும். அதற்கு வேண்டிய தண்ணீரும் சீதோஷ்ண நிலையும் அப்போதுதான் கிடைக்கும். இதெல்லாம் சீனிவாசனுக்குத் தெரியாமலில்லை. தெரியும். ஆனாலும்கூட ஆவேசம்! உள்ளுக்குள் ஒரு வேகம் சரியாய் நடக்கும் என்கிற தைரியம்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக