முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
``அது போதும். ஆனால் என் இழப்புக்கு யார் பொறுப்பு? அந்தாள் திரும்ப எல்லாத்தையும் தருவானா? என் கடை –உடைமைகள்?’’
``அதையெல்லாம் மறந்திடு. பழசை நினைச்சுக்கிட்டிருந்தா நிம்மதி போகும். பகை ஆக்கத்திற்கு எதிரி. நான் அவரிடம் பேசுகிறேன்!’’
முன்சீப்பின் முயற்சி கை கொடுக்கவில்லை. ராஜ் ரெட்டியார் எதற்கும் மசிவதாய்த் தெரியவில்லை. முன்சீப்பையும் மதிக்கவில்லை. ``வெளியூர்க்காரன் நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போ’’ என்று விரட்டினார்.
அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
சீனிவாசன், ``இப்போ என்ன சொல்றீங்க... என் முடிவு சரிதானே?’’
``இல்லை. இப்பவும் சொல்கிறேன். அந்தாளின் நடத்தை சரியில்லைதான். திமிராத்தான் இருக்கான். ஆனா –அதே திமிர் உன்னிடத்திலும் தெரியுது. அப்புறம் அவருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?’’
``நான் இப்போ என்னதான் செய்யணுங்கிறீங்க? ஊரில் பசியோடு கிடக்கணுமா?’’
``வேணாம். இங்கிருந்தால் தானே உனக்குப் பிரச்சனை! கொஞ்ச நாட்களுக்கு வெளியே போ. மனம் அடங்கும். ஆறுதல் கிடைக்கும். மாற்றுவழி பிறக்கும்’’ என்று சீனிவாசனைத் தன் ஊருக்கு அழைத்துப் போனார். பெரம்பலூருக்கு அழைத்துப் போய், ``பார்! வெளி உலகத்தைப் பார்! இங்கே யாருக்குப் பிரச்சனையில்லை? யாருக்குக் இருக்கிறார்கள். அதுக்காகக் கத்தியை தூக்கிக் கொண்டா திரிகிறார்கள். நீ வாழ வேண்டியவன் –உன் வாழ்வு மலரணும்’’ என்று போதித்து நொச்சியம் கந்தசாமி இவரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அவரது வழிகாட்டுதலில் சீனிவாசனின் மனம் பக்குவப்பட்டிருந்தது. அதன்பிறகு கவனத்தை வேறு எந்த பக்கமும் சிதறவிடாமல் உழைத்ததில் நல்ல முன்னேற்றம்! வளர்ச்சி!
கடைகள் பல! தொழில்கள் பல! கை வைப்பதிலெல்லாம் வெற்றி கிடைத்தது. அதுவே அவரது உள்ளத்தில் விஷம் விதைப்பதாக அமைந்தது. இறுமாப்பு! அவ்வப்போது திமிர் பற்றும், பற்றிப் படரும் அதை நண்பர்களும் ஊதி விடுவர்.
இன்று நான் பெரியவன் –பணம் இருக்கிறது. தொழில்! ஆட்கள்! நான் ஏன் பயப்பட வேண்டும்?
அந்த ராஜ் ரெட்டியாரின் மேலிருந்த வன்மம் அவ்வப்போது தலை தூக்கும். அவர் பெண்ணிற்கு அந்த நேரம் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.
கூட இருந்தவர்கள் தூண்டிவிட்டனர். ``உன்னைப் பலி போட்டுவிட்டு அந்தாள் எப்படி வேற மாப்பிள்ளை பார்க்கலாம்? விடாதே! போய் அதே பெண்ணை உனக்கு கேள்!’’
``எனக்கு அவ வேணாம். அந்தாள் சகவாசமே வேணாம்!”
``ஏய்... நீ கோழையா...?
``` ``இல்லை’’
``கடவுளா?’’
````இல்லை.’’
``ஆங்! ரோஷம் வருதில்லே! இது! இது அங்கேயும் வரணும்! மனுஷன்னா –மான ரோஷம் வேணும். எந்த சந்தர்ப்பத்துலயாவது அதைக் காட்டணும்!’’
``காட்டி என்ன பண்ணப் போறேன்!’’
``எதுவும் சாதிக்கறதுக்காக இல்லை. நீயும் மனுஷன்! உன்னாலயும் கெடுதல் பண்ண முடியும்கிறதைக் காட்டுவதற்காக –காட்டணும்! செயல்படணும். அந்தாளுக்கும் வலிக்கணும். எளியோரின் வலியை உணர்த்தனும்!’’
``அதுக்கு என்ன பண்ணணுங்கிறீங்க?’’
``அப்படிவா –வழிக்கு! அந்த கல்யாணத்தை நிறுத்தணும்!’’
``அவன் செய்த தவறுக்கு அந்தப் பெண் ஏன் தண்டனை அனுபவிக்கணும்?’’
``ஒரு தப்புமே செய்யாத நீ அனுபவிக்கும் போது –அவளைச் சொல்லி உன்னை வீழ்த்தினானே! அப்பனின் சொத்து சுகம் –நகை நட்டை அனுபவிப்பவள் அவனது பாவத்தையும் சேர்த்துத்தான் அனுபவிக்கணும், அனுபவிக்கட்டும்!’’
சீனிவாசனுக்கு விர்ரென்று திமிர் ஏறிற்று, ஆமாம் ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் ஆள், ஆண் என்று நிரூபிக்க வேண்டும் என்கிற வைராக்கியம்!
ஆள் வைத்துக் கல்யாணத்திற்கு அவர்களை அனுப்பித் தகராறு செய்ய வைத்து அந்தக் கல்யாணத்தை நிறுத்தினார்.
அதன்பிறகு ராஜ் ரெட்டியார் –வழிக்கு வந்தார். அவரிடம் வந்து கெஞ்சாத குறை. தன் தவறுகளுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். சீனிவாசனுக்கு அப்போதுதான் சமாதானமாயிற்று. எனக்கு இது போதும் என்று ஒதுங்கிக் கொடுத்து –அப்புறம் அப்பெண்ணிற்குத் திருமணம் நடந்தது.
(8)
அந்தச் சம்பவங்களை அசை போட்ட ஐயா... மெல்லச் சிரித்துக் கொண்டார். ``எல்லாம் காலத்தின் கோலம், அனுபவமின்மை –இளம் ரத்தத்தின் உணர்ச்சிக் கொப்பளிப்பு. இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் செயல் பைத்தியக்காரத்தனமாய்படுகிறது.
பகை –புகை எல்லாம் வெறும் மாயை. இங்கே யாரும் யாரையும் அழித்துவிட முடியாது. ஒன்று அழிந்தால் இன்னொன்று பிறக்கும். வேறு ஒன்றாக அது வளரும்.
பழி வாங்குவது –எதிரியைக் கவிழ்ப்பது என்பதெல்லாம் வேண்டாத வேலை. சிறுபிள்ளைத்தனம். நம் சக்தியை அந்தப் பக்கம் திருப்பாமல் –அதை ஆக்கத்திற்குப் பயன்படுத்தினால் நாமும் வளரலாம். நாடும் வளரும். சமூகமும், வளம் பெறும். இது அந்தந்தக் கால கட்டத்தில் நமக்குப் புரிவதில்லை... தெரிவதில்லை.
சின்னச் சின்ன காயங்கள், இழப்புகளைப் பெரிதாய் நினைக்கிறோம். அதிலேயே கிடந்து உழல்கிறோம். ஒத்துவராததைத் தூக்கி எறிய வேண்டும். அந்த ராஜ் ரெட்டியாரைப் பழிவாங்க வேண்டும் என்று நான் கொதித்தபோது நானும் கூட நிம்மதியாய் இல்லை. கல்யாணத்தை நிறுத்தின பின்பு மனது சந்தோஷிப்பதற்குப் பதில் வருத்தப்படவே செய்தது.
உறுத்தல் –
குற்ற உணர்வு. குற்ற உணர்வுக்கு முன்னில் சந்தோஷமும் இறுமாப்பும் அடிபட்டுப் போயிற்று. அதுதான் உண்மை அதுதான் யதார்த்தம். நம் காரியங்கள் பிறருக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். முடியாத பட்சத்தில் கேடு விளைவிக்காத வகையிலாவது பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் எந்தவிதத் தப்பான சிந்தனைக்கும் மனதில் இடம் தருவதில்லை. ``இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’’ என்பதை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
பிறகு சில வருடங்களில் அதே ராஜ் ரெட்டியார் மனம் திருந்தி –வருந்தி படுக்கையில் வீழ்ந்த போது –உதவிக்கு ஆளில்லாத போது நான் தான் உதவினேன். அவர் இறந்த போதும்கூட காரியங்களைச் செய்து முடிக்க முதல் ஆளாய்ப் போய் நின்றதும்கூட நான்தான்.
அந்தக் திருப்தி –வேறு எதிலும் எனக்குக் கிடைத்ததில்லை’’ என்று நெகிழ்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் ராமசாமி ரெட்டியார் என்பவரும் ஊரில் இவருக்கு இடைஞ்சல்கள் செய்து கொண்டிருந்தவர். அவர் இறந்த போதும் எல்லாவற்றையும் மறந்து உதவி செய்த பெருமை இவருக்குண்டு.
அன்று என்றில்லை –இடைஞ்சல் செய்தவர்களுக்கு உதவுகிற அந்தக் குணம் சீனிவாசனிடம் இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொழிலில் போட்டியாளர்கள், போட்டிக் கல்வி நிறுவனங்கள் என்று அனைவருக்கும் இவர் தோள் கொடுத்து வருகிறார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக