புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 14

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



பெரம்லூர் துறைமங்கலத்தைச் சேர்ந்த தனலட்சுமி அம்மாளின் குடும்பமும் கூட வசதி பெற்றிருக்கவில்லை. வீட்டில் தனலட்சுமியையும் சேர்த்து 5 பெண் பிள்ளைகள் –இவர்களுக்குக் கீழ் 2 தம்பிகள்.

அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற சொந்த வழியுமில்லாமல் சொந்தமும் உதவும் சூழல் இல்லாத போது ஐயா அவர்கள் கை கொடுத்தார்கள். குடும்பத்தில் கடன் சுமை, மாமனாருக்கு வயதாகிக் குடும்பத்தைத் தாங்க முடியாத நிலைமையில் மருமகனான சீனிவாசனிடம் ``நீ எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறாய். எவ்வளவோ பேர்களுக்கு உதவியிருக்கிறாய். உன் நல்ல மனதிற்கு –நல்ல குணத்திற்கு கடவுள் எப்போதும் துணையிருப்பார். பெண் கொடுத்த நான் உனக்கு உதவியாக இருக்க வேண்டும் பொருள் – செல்வம் கொடுத்தால் அது உன் தொழிலுக்கும் உதவியாக இருக்கும். ஆனால் அதற்குப் பதில் உனக்கு தொந்தரவுதான் கொடுக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என் குடும்பத்தையும் சேர்த்து நீதான் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

சீனிவாசன் அதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டு –மாமனாரின் குடும்பத்தை-தனதாகத் தத்து எடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம். மாமனாரின் மகள்களுக்கெல்லாம் இவர்தான் திருமணம் செய்து வைத்தார். தனலட்சுமியின் தம்பிகள் இருவரையும் தன்னுடன் வைத்து அவர்களையும் தொழிலில் கூட வைத்துக் கொண்டார்.

தன் மகள்களை மனைவியின் தம்பிகள் திரு.நீல்ராஜ், திரு.மணி இருவருக்கும் கல்யாணம் செய்து கொடுத்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாகச் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

மருமகன்களும் சொந்த மகன்கள் போல இவரிடம் தொழில் –நேர்மை-நாணயம் –கற்று ஆத்மார்த்தமாய்த் தோள் கொடுத்துச் செயல்படுவதால் சீனிவாசன் எனும் ஆலமரம் இன்று பெருந்தோப்பாக வளர்ந்திருக்கிறது.

கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அவற்றின் செயலாளராக திரு. நீல்ராஜ் பொறுப்பேற்றுத் திறம்படக் கவனித்து வருகிறார். ஐயாவின் அதே சிந்தனை ஓட்டத்தில் –சீர்குணத்தில் –அடக்கத்தில் –ஆற்றலில் இவரது நிர்வாகத்திறமையும் அடங்கியிருக்கிறது.

அடக்கம் –எளிமை –வேகம்- விவேகம்! அசராமை! துணிவு –கனிவு –மனிதாபிமானம் –என ஐயாவிடம் கற்றுக் கொண்ட அனுபவம் இவருக்கு நிர்வாகத்தில் கைகொடுக்கிறது.

ஐயாவைக் கூட இருந்து பார்த்து –பழகி –வளர்ந்து வந்தவர் என்கிற முறையில் திரு.நீல்ராஜ் அவர்களிடம் ஐயா பற்றியும் –கல்வி நிறுவனங்களில் தோற்றம் –வளர்ச்சி பற்றியும் கலந்து பேசினோம்.

``சின்ன வயதிலிருந்தே நாங்கள் ஐயாவின் நிழலில் அவரது பராமரிப்பில் தான் வளர்ந்தோம் . எங்கள் குடும்பத்தின் கஷ்டமான சூழ்நிலையில் நானும் தம்பியும்கூட பள்ளி மேல்படிப்புக்கு மேல் தாண்ட முடியவில்லை.

ஐயா தனியாகக் கஷ்டப்படுகிறார் என்று அவருக்குத் துணையாக அவரது தொழிலில் நாங்களும் ஐக்கியமானோம்.

அப்போது டீக்கடை, ஹோட்டல் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து ஊரில் பால் பண்ணையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 3 மணி, மாலை 4 மணி எனப் பால் கறந்து வந்து கடைக்கு ஊற்ற வேண்டும்.

அப்போது பஸ் வசதியில்லை. சைக்கிள்தான், மோசமான மண்ரோடு, குண்டும் குழியும் மிரட்டும். மழை பெய்து விட்டால் சகதியில் சைக்கிள் செல்லாது. பால் கேன்களைக் கேரியரில் கட்டி –சைக்கிளையும் சேர்த்துத் தோளில் சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்காக நாங்கள் அஞ்சுவதில்லை.

ஐயாவின் தன்னம்பிக்கை –துணிச்சல் எல்லாம் அவரைப் பார்த்து வளர்ந்ததில் எங்களுக்கும் வந்திருந்தது.

பால் பண்ணையைத் தரத்துடனும் –உரிய நேரத்துடனும் நடத்தி வந்தால் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. வாடிக்கையாளர்களும் அதிகமாயினர். பொதுமக்களுக்குப் பால் மாடு வாங்க வட்டியில்லாமல் கடன் கொடுத்துப் பால் பண்ணை மென்மேலும் வளர ஆரம்பித்தது.

எங்களைக் கஷ்டத்தில் காப்பாற்றின பால் பண்ணையை விட்டு விடாமல் இன்னும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இப்போது தினசரி 3500 லிட்டருக்குக் குறையாமல் பால் விநியோகம் செய்கிறோ.

(14)

1980–இல் மதுபானக் கடைகளை அரசு ஏலம் விட்ட போது ஏன் அந்தத் தொழிலில் இறங்கக்கூடாது என்று தோன்றிற்று. ஆனால் அதற்குப் பெரிய அளவில் முதலீடு தேவைப்பட்டது.

மதுக்கடை வேணுமா- இந்த தொழில் தேவையா என்கிற மன உளைச்சல் இருந்தாலும் –நாம் என்ன முறைகேடாகவா போகிறோம்? அரசே நடத்தும் போது –நாம் ஏன் அந்தத் தொழில் செய்யக்கூடாது என்று மனச் சமாதானம்.

மதுக்கடைகளைப் போட்டியில் தனியாய் ஏலம் எடுக்க முடியாது என்பதாலும் அந்தத் தொழிலில் அனுபவம் இல்லாததாலும் கூட்டுச் சேர்ந்து எடுத்தோம். அதற்குக்கூட கையில் பணமில்லாததால் ஊரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்றார்கள். மதுக்கடையில் வருமானம் வருமா-வராதா என்கிற சந்தேகத்தில் வாழ்வா –சாவா என களத்தில் இறங்கினோம்.

ஏற்கனவே மனசாட்சியின் உறுத்தல், அத்துடன் கள்ளச்சாராயப் பேர்வழிகள் முதல் பலரிடமும் கடுமையான எதிர்ப்பு வேறு. எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாய் நடத்தி ஓரளவிற்கு லாபமும் கிடைத்தது.

இருந்தாலும் மதுபானக் கடைகள் நிரந்தரமல்ல. அடுத்த முறை போட்டி அதிகமாகும். ஏலம் வேறு யாருக்காவது போகலாம் என்பதால் வெவ்வேறு தொழில்கள் பற்றி யோசனை போயிற்று.

அப்போது ஐயாவின் நண்பரும், ஆசிரியருமான திரு.வெங்கட்ராஜ் லாரி, பஸ்கள் வாங்கத் தூண்டினார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட தனலட்சுமி லாரி பார்சல் சர்வீஸ் இன்றும் உள்ளது.

பிறகு பஸ்கள், அங்காளம்மன் ராசி, தீனதயாளன் என வாங்கி 4 ரூட் பஸ்களும், மினி பஸ்கள் 9ம் இயங்க ஆரம்பித்தன.

ஐயா, நாணயம் தவறக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பார் செய்கிற தொழிலில் நேர்மை வேண்டும். சுத்தம் வேண்டும் லாபத்திற்காக யாரையும் ஏமாற்றக்கூடாது. கொள்ளை லாபம் கூடாது என்பதில் உறுதி காப்பவர். கடையில் தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்.

ஒரு சமயம் –எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது –எனது கவனக்குறைவால் கடையில் சிறு தவறு நடந்துவிட்டது. அது தெரிந்ததும் ஐயா கொதித்துப் போனார். ``இனித் தவறு ஏற்படாது’’ என்று நான் சொல்லியும்கூட அவர் விடவில்லை.

சும்மா வாயால் சொன்னால் போதாது. `இனித் தவறு ஏற்படாது’ன்னு 5000 முறை எழுது என்று எழுத வைத்தார். இம்போசிஷன்! அதன்பிறகு தவறு அங்கு நடக்குமா? அந்த உணர்வு அடி மனத்தின் ஆழத்தில் பதிந்து இன்றும் எச்சரிக்கையாய்ச் செயல்பட வைக்கிறது.

பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதால் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆத்மார்த்தமும், பயமும் ஏற்படும். தத்தம் துறைகளை நன்கு கவனிக்க வேண்டும்-வளர்க்கணும் –வளரணும் –ஐயாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற உந்துதல் எழும். அது வேகமாய்ச் செயல் பட வைக்கும் வைக்கிறது.

எனது மகனுக்கு 5 வயது ஆன போது ஒரு திருப்பம் என்று கூட சொல்லலாம். நாம் தான் படிக்க முடியலை.அன்று கஷ்டமான் சூழ்நிலை. இப்போது அந்தத் கஷ்டம் இல்லை. ஒரளவிற்கு வசதி பெற்றிருக்கிறோம். பையனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்.

நம் அருகில் இருந்தால் படிப்புக் கெடலாம். என்பதால் –குன்னூரில் கிறிஸ்தவப் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.

அந்தச் சமயம் திருச்சியில் –ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.சி.வெங்கடாஜலபதி எனபவரின் நட்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது.

தொடரும்...



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக