முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
ஊர்க்காரர்களேல்லாம் அவரை ஏளனம் பேசினார்! கண்ணாபாடியானுக்கு புத்தி மழுங்கிப் போச்சு! லூஸ் என்றனர். சொத்து – பத்து போனதில் மரை கழன்று போச்சு –இல்லாட்டி இப்போ போய் தஞ்சை ஓட்டுவானா என்று காது படவே நகையாடினர்.
ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. செயல்படு! எல்லாம் நல்லபடியே நடக்கும் என்கிற நம்பிக்கை. பாஸிடிவ் திங்கிங்! நல்லது நினைத்தால் –நல்லதை நம்பினால் –நல்ல விதம் முயன்றால் –நன்றாக உழைத்தால் இயற்கையும் துணை இருக்கும், நல்லதே நடக்கும் என அவர் நம்பினார்.
அதன்படியே – அப்போது நல்ல மழை பெய்தது. யாரும் அதை எதிர்ப்பார்க்கவில்லை. அவர் எதிர்பார்த்தார். ஏளனம் செய்த வாய் அடைத்துப் போயிற்று அன்று.
நெல்லும் கரும்பும் பயிரிட்டு அமோக மகசூல்! அதற்கு நல்ல விலையும் கூட கிடைத்தது. அது சீனிவாசனுக்கு உற்சாகம் தந்தது. தெம்பு! துணிவு. யாருக்கும் நாம் பயப்பட வேண்டியதில்லை. யாரும் இனி என்னை வீழ்த்த முடியாது. எதுவும் நம்மால் முடியும்.
இனியும் கோழையாக இருக்கக்கூடாது. இருக்க மாட்டேன். என் வழியில் யார் குறுக்கீடும் இனிக் கூடாது குறுக்கே வந்தால் எதிர்பேன், விரட்டுவேன்! வருவது வரட்டும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அடங்கிக் கிடந்து போதும்.
என்னதான் உழைத்தாலும் கஷ்டப்பட்டாலும் கிராமப் பகுதிகளில் வளர்ச்சி என்பது சிறிய அளவில்தான் முடியும் யோசித்துப் பார்க்கும் போது தன் முயற்சியும் உழைப்பும் வீணாகிறதோ என்கிற எண்ணம் அவருக்கு எழுந்தது. இதே உழைப்பை டவுனில் செய்தால் இன்னும் அதிக வருமானம் பார்க்கலாம். வேகமாய் முன்னேறலாம் என்பது அவருக்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது.
டவுன் எனும் போது சுற்றுப்பக்கம் முழுக்க வருவர். வியாபாரம் தொடங்கினால் பெரிதாக்கலாம் என ஆராய்ந்த போது பெரம்பலூர் பரவாயில்லை என்று தோன்றிற்று. அவருக்கு அருகிலுள்ள –தெரிந்த ஒரே நகரம் பெரம்பலூர் தான்!
1961 அவருக்குத் திருப்பம் தந்த வருடம்.
பெரம்பலூரில் தெப்பக்குளம் அருகே இடம் பார்த்து டீக்கடை ஆரம்பித்தார். அது நன்றாக வளர ஆரம்பித்தது. அதற்குத் தேவையான பால் வெளியே வாங்கும்போது –போதுமான தரத்தில் இல்லை. வேண்டிய நேரத்திற்கும் கிடைப்பதில்லை. அதனால் –ஏன் நாமே பால் பண்ணை நடத்தக்கூடாது என்று யோசனை போயிற்று.
அதற்கு முன்பே கிராமத்தில் மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்ற அனுபவம் அதற்குக் கைகொடுத்தது.
வெள்ளாரிபட்டு எனும் ஊரில் பால் டெண்டர் எடுத்தார். 1963 -68 வரை 5 வருடங்கள் இவர் பட்ட கஷ்டம் அதிகம். விடியற்காலையில் சைக்கிளில் போய் பால் கறந்து 30 கி.மீ. சைக்கிள் மிதித்து பெரம்பலூருக்கு வருவார். இங்கே பாலை 5 மணிக்குள் பைசல் பண்ணிவிட்டு டீக்கடை வேலை!
மதியம் திரும்ப சைக்கிள் மிதித்து போய் பால் எடுத்து வருவார். இப்படி தினம் 4 முறை சைக்கிள் பயணம்! ஒரு நாளைக்கு 120 கி.மீ சைக்கிள் மிதிக்கணும்! தூக்கம் கெடும். அலுப்பாகும். ஆனாலும் கூட தளர்வதில்லை. தன் முன்னேற்றத்திற்கு இறைவன் ஒவ்வொரு வழியாகக் காட்டும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உஷாராக இருப்பார்.
வாய்ப்புகள்!
ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை நாம்தான் தேடிப் போக வேண்டும். எது நமக்கு உகந்ததோ அதைத் தேர்வு செய்து களத்தில் இறங்க வேண்டும். நமக்கு உகந்தது கிடைக்காவிட்டால் –கிடைப்பதை உகந்ததாக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் புத்திசாலித்தனம். வெற்றிக்கு முதல்படி.
டீக்கடை எதிர்பார்த்தபடியே வளர ஆரம்பித்தது. அப்புறம் –டீயுடன் டிபன், சாப்பாடு, என ஹோட்டலாக மாறிற்று. அங்கு மொத்தம் 8 பேர்கள் வேலை செய்தனர்.
சீனிவாசன் –முதலில் எழுந்து பால் கறந்து வந்து, கடையைச் சுத்தம் பண்ணி டீ போட்டுத் தந்துதான் ஆட்களை எழுப்புவார். வேலைக்காக அவர் அஞ்சுவதில்லை. வேலைக்காரந்தானே என்று ஊழியர்களை அலட்சியப்படுத்துவதில்லை.
அன்று முதல் இன்றுவரை மனிதாபிமானம் இவரைக் காக்கிறது. உயர்த்துகிறது, உயரத்தில் வைத்திருக்கிறது.
டீக்கடை ஓரளவிற்கு நிலைத்தும் அடுத்து உரக்கடை, புண்ணாக்குக் கடை எனத் திட்டமிட்டார்.
சீனிவாசனின் வெளியூர் வளர்ச்சியும் கூட எதிரிகளுக்குக் குறிப்பாய் அந்த ராஜ் ரெட்டியார், ராமசாமி ரெட்டியார் போன்றோர்களுக்குப் பொறுக்கவில்லை. உள்ளூரில் வாழ விடாமல் பண்ணினது பத்தாது என்று பெரம்பலூரிலும் இடைஞ்சல் பண்ண ஆரம்பித்தனர்.
``விட்டால் இவன் எங்கோ போய்விடுவான் போலிருக்கே –நம்மைவிட பெரிய ஆளாயிருவானே’’ என்கிற ஆதங்கம் ஆற்றாமை!
சீனிவாசன், கடைகள் ஆரம்பிக்க இடம் தேடும்போது –சம்பந்தப்பட்டவர்களிடம் போய் கட்டடம் கொடுக்கக்கூடாது என்று மிரட்டுவார். அவர்களுக்குப் பயந்து கொண்டு ஒதுங்கினவர்களும் உண்டு.
(6)
பெரம்பலூரில் கடை ஆரம்பிக்க இடம் பார்த்தால் அவர்களுக்கு மூக்கில் வியர்த்து விடும். உடனே வந்து இடம் தந்தவர்களை மிரட்டுவார்கள். அவர்களும் பயந்து கொண்டு பின் வாங்குவர்.
சீனிவாசன் பிறகு வேறு இடம் பார்ப்பார். அங்கும் வருவார்கள். இப்படியே எதிர்ப்பிலேயே வளர ஆரம்பித்தார். யோசிக்கும் போது எதிர்க்க எதிர்க்க இவருக்குப் பலம் கிடைத்து மென்மேலும் ஜெயிக்க வேண்டும் என்கிற உந்துதல் கிடைத்ததை உணர முடிந்தது.
சீனிவாசன் பொதுவாக யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. செய்ய நினைப்பதுமில்லை. அவனவன் வினையை அவனே அனுபவிப்பான். ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவார்.
ஆனால் அந்த ராஜ் ரெட்டியாரின் விஷயத்தில் அன்று செய்யவிருந்த குற்றத்தைப் பற்றி சீனிவாசன் நினைவு கூர்கிறார்.
ஊரில் எந்த வகையிலும் ராஜ் ரெட்டியார் அவரை வாழவிடாமல் செய்த சமயம் –
சீனிவாசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் உனக்குப் போட்டியில்லை. எதிரியில்லை –உன் அளவிற்கு வயசோ –அனுபவமோ –வசதியோ –ஆள் பலமோ இல்லாதவன் -என்னை விட்டுவிடு என்று கெஞ்சியும் கூட விடாமல் துரத்தவே வெறுத்துப் போனார்.
இந்தாள் உள்ளவரை நமக்கு நிம்மிதியில்லை –வாழ முடியாது. இவரைத் தீர்த்துக் கட்டினால் தான் வாழ்வு என்கிற முடிவுக்கு வந்தார், இளம் ரத்தம், விரக்தியின் விளிம்பிலிருந்த மனது அவரைக் கொலை செய்யும் வரை போயிற்று.
கொலை செய்தால் அவர் இறக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு சந்திக்க வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி அவர் யோசிக்கவில்லை. யோசிக்கத் தயாராக இல்லை. அவரைத் தீர்த்துக்கட்ட கத்தி வைத்துக் கொண்டு சீனிவாசன் தருணம் பார்த்திருந்தார்.
ஒரு நாள் ராஜ் ரெட்டியார் வெளியூர் போய்விட்டு இருட்டினபிறகு ஊர் திரும்பப் போவது தெரிந்தது. அவர் சைக்கிளில் சோளக் கொல்லை வழியாகத்தான் வந்தாக வேண்டும். வழியில் வைத்து ஒரே குத்து! ஆள் அங்கேயே ரத்தம் பொங்கிச் சாக வேண்டும்! சீனிவாசன் ஒரு முடிவுக்கு வந்தார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக