புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 16

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



அதன் பலனாய் அடுத்த வருடம் 235 மாணவிகள் சேர்ந்தனர். அது படிப்படியாய் வளர்ந்து இன்று 3500 பெண்களாயிற்று! அடுத்து தனிப் பல்கலைக்கழகத்திற்கு மனு கொடுத்திருக்கிறோம்.

அடுத்த கட்டமாக,

கணினி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆரம்பிக்கும் திட்டம் எழுந்தது. மத்திய அரசிடம் ஐயா விண்ணப்பித்தார்.

டெல்லிக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.

டெல்லிக்கு அதுவரை நாங்கள் யாரும் போனதில்லை. மொழி பிரச்சினை வேறு. அதனால் ஐயாவின் நண்பரும் ஓய்வுபெற்ற புரபசருமான திரு.ரங்கராஜன் அவர்களைத் துணைக்கு அழைத்துப் போனோம். அவர் எங்களுக்கும் அதிகாரிக்குமிடையே மொழி பெயர்த்துப் பேசினார். எங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்.

ஆனால் அவர்கள் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தனர். வாக்கு வாதம் முற்றியதில் அவர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முடிவாக அவர்கள், நீங்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அனுமதி தரமுடியாது. பாலிடெக்னிக்கிற்கு மட்டும் தருகிறோம் என்றனர்.சரி, ஒருவிதத்தில் அதுவும்கூட நல்லதுதான். இந்தப் பகுதி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி அவசியமான ஒன்று. வேலைவாய்ப்பிற்கு அது உதவும் என்று சம்மதித்தோம்.

பாலிடெக்னிக் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தது.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த அதிகாரிகள், வழக்கம் போல ஏதாவது குறை சொல்வார்கள், குழப்பம் பண்ணுவார்கள் என்கிற பதற்றம் இருந்தது.

ஆனால் அவர்களோ, பள்ளி, கல்லூரி இடங்கள், கட்டடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இத்தனை வசதிகள் வைத்துள்ள நீங்கள் ஏன் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கக் கூடாது என்று கேட்டனர்.

என்ன ஒரு வினோதம்! மேலே உள்ளவர்கள் என்னென்னவோ சொல்லி மறுக்கிறார்கள். வசதிகள் பற்றி எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குப் புரிவதில்லை.அவர்களின் பிடிவாதத்திலிருந்து கீழே இறங்குவதில்லை!

சரி, இப்போதைக்கு பாலிடெக்னிக்கை ஆரம்பித்து இதை வளர்ப்போம். பிறகு பொறியியல் கல்லூரிக்கு மோதுவோம் என்று 1998 –இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே 240 மாணவர்கள்.

கடுமையான கண்காணிப்பிலும் ஆசிரியர்களின் திறமையாலும் ஒரே வருடத்தில் –உள்ள 150 கல்லூரிகளில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் 14 வது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு தொடர்ந்து அபார வளர்ச்சி.

இங்கே பாலிடெக்னிக்கில் டிப்ளமா படித்து வெளியே வருபவர்கள். என்ஜீனியரிங் இருந்தால் சேர்த்து படிக்கலாம் என விருப்பப்பட்டனர்.

பலரும் அதற்காகத் தூண்டவே, திரும்பப் பொறியியல் கல்லூரிக்கு மனு போடப்பட்டது. அதற்கான கட்டடங்கள் வேகமாய் ரெடியாகின.

இதற்கிடையில் வளர்ச்சியின் வேகம் தாங்காமலோ, என்னவோ குடும்பத்தில் பெரிய துக்கம் ஒன்று சம்பவித்தது. ஐயாவின் மனைவி திருமதி. தனலட்சுமி அவர்கள் மரணம்!

அது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் பாதித்தது. குடும்பப் பொறுப்பு மட்டுமின்றி ஐயாவுக்குச் சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்த அவரின் இழப்பிலிருந்து மீள நீண்ட நாட்கள் பிடித்தன.

2000 –ஆம் ஆண்டின் பரிசோதனைக்கு வந்த குழு, சின்னச் சின்ன குறைகளைச் சொல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி தர மறுத்தது. இத்தனைக்கும் சட்டப்படியான எந்தக் குறைகளும் அப்போது இல்லை. என்ன செய்வது! இதுமாதிரி விஷயங்கள் நிர்வாகித்தினருக்கு பழகிப் போயிருந்தது.

அந்தக் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்து மறுபடியும் மனு போட, 2001 –இல் அனுமதி கிடைத்து பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஏரோநாடிக்கல் முதல் அனைத்துப் பிரிவுகளும் ஆரம்பம் முதலே வெற்றிகரமாய்க் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த முயற்சியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மனுபோட, தொடர்ந்து ஐந்து வருடங்கள் நிராகரித்தனர். இவர்களுடன் சேர்த்து மனுபோட்ட 43 நிறுவனங்களும் சேர்த்து வழக்குத் தொடர்ந்ததின் விளைவாய்ப் பிறகு அனுமதி கிடைத்தது. பி.எட்., கல்லூரியும் இன்று மிகப்பெரிய அளவில் நடக்கிறது.

(15)

பொறியியல் கல்லூரி ஆரம்பித்த சமயம் லோன் அப்ளை செய்துபட்ட அவதிகளை திரு.நீல்ராஜ் நினைவு கூர்ந்தார். இவர்களுக்கு ஏற்கெனவே வங்கியில் லோன் இருந்தது. முறைப்படி அவற்றைத் திருப்பிச் செலுத்தவும் செய்தனர்.

இருந்தாலும்கூட பெரிய தொகை என்பதால் லோக்கல் வங்கி இவர்களின் மனுவைத் தலைமை அலுவலகத்திற்கு சிபாரிசு செய்திருந்தது. அங்கிருந்து இவர்களுக்கு அழைப்பு வரவே –கரூர் சென்று ஒரு நாள் முழுக்க அந்த வங்கியில் தேவுடு காத்திருந்தனர். அதில் ஐயாவும் அடக்கம்.

இந்தா அழைப்பார்கள், இப்போது கூப்பிட்டு விடுவார்கள் என சாப்பிடக்கூடப் போகாமல் காத்திருந்து பயங்கர விரக்தியில் இருந்தனர். இத்தனை கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாய் நடத்தி வருபவர்களுக்கும் இப்படி மரியாதையின்மை.

கடன் கேட்க வருபவர்கள் கடன்காரர்களா? வங்கிக்கு அடிமைகளா? தகுதிம் கேரண்டி கொடுத்தபின்புதான் பணம் தர்ப்போகிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் இந்த அசட்டை? வங்கியின் வருமானம் கடன் கொடுத்து வாங்குவதில் இருக்கும்போது எதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று வெறுப்பு.

கடைசியாக மாலை ஏழு மணிக்கு இவர்களை அழைத்தனர். பேப்பர்களையெல்லாம் பார்த்த ஜெனரல் மானேஜர், ``எதை நம்பி எந்த அடிப்படையில் உங்களுக்கு லோன் தருவது?’’ என்றார்.

ஐயாவுக்கு பயங்கரக் கோபம் –அடக்கிக் கொண்டார்.

பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற வேண்டும் –தொழில் தொடங்கி முன்னேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் அரசாங்கம் பாடுபடுகிறது, மறுபக்கம் –வங்கிகள் இந்த மாதிரி1

``லோன் தருவதற்கு உங்களுக்குப் பொறுமானமாக என்னென்ன தேவையோ அவற்றைச் சமர்ப்பிக்கிறோம். போதுமா.....?’’

``அதில் பிரச்சனை இல்லை. என்ஜினியரிங் கல்லூரிகள் ஏற்கனவே நிறைய ஆயிற்று. மேற்கொண்டு நீங்கள் தொடங்கினால் அதை நடத்துவது சிரமம் அதனால் புதிதாய் பொறியியல் கல்லூரி தேவையில்லை!’’

அதைக் கேட்டதும் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் ஐயாவிடமிருந்து கொப்பளிக்க ஆரம்பித்தது.

``லோன் வேண்டுமானால் தரமுடியாது என்று சொல்லுங்கள், கல்லூரி தேவையில்லை என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கில்லை.ஏற்கெனவே முறைப்படி அனுமதி பெற்றுத்தான் உங்களிடம் வந்துள்ளோம். இந்த மாதிரிப் பேசுவதற்கு வங்கிக்கு ஜெனரல் மானேஜர் தேவையா...?’’

``இல்லை நான் உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்’’

``எது நன்மை? வளர்ச்சியில்லாப் பகுதியில் பாடுபட்டு உளப்பூர்வமாகச் சேவை செய்ய வேண்டித் தொடங்கும்போது அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரணுமே தவிர டிஸ்கரேஜ் பண்ணக்கூடாது!’’

ஏறக்குறைய சண்டைப்பிடித்து விட்டு வெளியே வந்தனர். லோன் நிச்சயம் கிடைக்காது என்றே அவர்கள் நினைத்தனர்.

ஆனால் அந்த வங்கியிலிருந்து கேட்டதில் பாதி அளவிற்குக் கடன் தந்தனர்.

தொடரும்...





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக