ஞாயிறு, 12 ஜூன், 2011

எது சிறந்தத் தொழில்?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழில் ஒரு கற்பனைப் பேட்டி ஒன்றைப் படித்தேன். இக்கற்பனையில் நகைச்சுவையும், ஒரு செய்தியும் இருக்கிறது. ஒரு பத்திரிக்கை நிருபர் பல வகையான தொழில் செய்வோர்களை பேட்டி எடுத்திருந்தார்.

சென்னையில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பேட்டி ஆரம்பிக்கிறது. நிருபர் அந்த தொழிலாளியிடம் இந்த தொழில் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அவர் பதிலளிக்கிறார். “போங்க சார் இது என்ன வருமானம் மக்கள் என் கிட்ட சின்ன தொகைக்கு கூட பேரம் பேசுகிறார்கள். என் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது இந்த தொழிலில் சாத்தியமில்லை. நேற்று என்னிடம் ஒரு வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினியர் சூ பாலீஸ் போட வந்திருந்தார். அவரைப் பார்த்து நினைத்தேன். ஆஹா! என்ன ஒரு சிறந்த தொழில்!” என்று….

உடனே பத்திரிக்கை நிருபர் ஒரு துபாயில் வேலை செய்யும் என்ஜினியரை கண்டுபிடித்து அவரிடம் உங்களுக்கு இந்த தொழில் பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். அவர் சொன்னார், “நல்ல வருமானம்தான் ஆனால் குடும்பம் குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியாத வாழ்க்கை. பிரிவு – துன்பம். ஒரு பேங்கில் ஆபிசர் போல் வேலை இருந்தால் வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டு மாலை வீட்டுக்கு வந்து விடலாம் என்றார்.

அடுத்து பத்திரிக்கை நிருபர் ஒரு வங்கி அதிகாரியிடம் சென்று, “உங்கள் தொழிலில் நிறைவு இருக்கிறதா?” எனக் கேட்டார். அவர் சொன்னார் “ஒவ்வொரு நாளும் கணக்கெல்லாம் பார்த்து வீடு திரும்ப நேரமாகிறது. கணக்குகளைப் பார்த்து பார்த்து டென்ஷனாக இருக்கிறது. பேசாமல் ஒரு கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்று சொன்னார்.

அடுத்து நிருபர் ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் பேட்டி எடுத்தார். அவர் சொன்னார், “சில மாணவர்கள் செய்கிற பிரச்சனைகளைப் பார்க்கிறபோது ஆபிசில ஒரு கிளார்க் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்றார்.

ஒரு கிளார்க்கிடம பேட்டி எடுத்தார், அவர் சொன்னார், “என்னுடைய அதிகாரியிடம் வேலை செய்வதை விட ஒரு ஆட்டோ ஓட்டிப் பிழைக்கலாம்” என்று சொன்னார்.

பிறகு நிருபர் ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார். அவர் சொன்னார், “ஆட்டோ ஓட்டி ஓட்டி முதுகு வலிக்கிறது. பேசாமல் கடை வைத்து பிழைத்திருக்கலாம்” என்றார். பேட்டி இப்படியே தொடர்கிறது.

இக்கற்பனைப் பேட்டியிலிருந்து நாம் தெரிந்து கொள்கிற செய்திகள் என்ன?

1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
2. எல்லாத் தொழிலும் இன்பமும், துன்பமும், உடன்பாட்டு அம்சங்களும், எதிர்மறை அம்சங்களும், பிடித்த அம்சங்களும், பிடிக்காத அம்சங்களும் கலந்தே இருக்கின்றன. நம்முடைய அறிவுக்கும் திறமைக்கும் விருப்பத்துக்கும் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பாக செய்தால் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெறலாம்.

சமுதாயத்துக்கு இக்காலத்துக்கோ, பிற்காலத்துக்கோ தீமை பயக்காமல் ஏதேனும் ஒரு வகையில் நன்மை செய்கிற நல்விளைவுகளை உண்டாக்ககூடிய எல்லாத் தொழில்களுமே சிறந்த தொழில்தான். நம் தொழிலால் நல்லது செய்து அதன் மூலம் வருகிற செல்வம் சிறந்த செல்வம். அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை உண்டாகும்.

0 comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக