புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 15

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



அவர், ``உங்கள் பிள்ளையை எதற்குத் தள்ளிப் போய்ச் சேர்க்கிறீர்கள் பேசாமல் நீங்களே பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாமே?’’’’’’ என்றார்.

``மற்றத் தொழில்கள் பரவாயில்லை. மேற்கல்வி பெற்றவர்கள் யாரும் இல்லாமல் எப்படி ஆரம்பித்து நடத்த முடியும் என்கிற சந்தேகமும் பயமும் இருந்தது.

``உங்களால் நிச்சயம் முடியும். அதற்கான நிர்வாகத் திறமை இருக்கிறது. யோசியுங்கள் ‘’என்று ஐயாவை விடாமல் அவர் தூண்டினார். அதன்பிறகு ஐயாவிற்கும் ஏன் கூடாது என் தோன்ற ஆரம்பித்தது. ரத்தத்தில் ஊறிப் போயிருந்த தன்னம்பிக்கை –நம்மால் முடியும் என்று தெம்பு தந்தது.

மற்ற தொழில்களில் வெற்றி என்பது லாபம் – பணம் இவற்றைப் பொருத்தே அமையும். அவற்றின் பலன் பணமாக வெளிப்படும். ஆனால் கல்வியின் வெற்றி என்பது சம்பாத்தியத்திற்கும் அப்பாற்பட்டு தொண்டு –சேவை –எனப் படர்ந்து விரிந்து ஆத்மதிரும்பதியும் தரக்கூடியது. நாம் கற்க முடியாததைப் பிறருக்குத் தருவோம். சுற்றுப்பக்க மக்களுக்குப் போதுமான கல்விக் கூடங்கள் இங்கு இல்லை. அந்த வசதியை நாம் ஏற்படுத்தித் தருவோம். பிறருக்கு உதவுவோம் என ஐயா முடிவெடுத்தார்கள்.

1994 –இல் மதுரை திரு. ராமகிருஷ்ணன் திறந்து வைக்க மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த முதல் வருடத்திலேயே 320 பிள்ளைகள் சேர்ந்தது. ஆச்சர்யமான, அதே சமயம் எங்களுக்கு சந்தோஷமான செய்தி, `இது நன்றாய் வளரும். பல்கலைக் கழகமாய் உருவெடுக்கும்’’ என்று அவர் வாழ்த்தினார்.

அது எங்களுக்கு உற்சாகம் தந்தது. இந்தப் பகுதி மக்கள் நம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எதைச் செய்தாலும் சிறப்பாய்ச் செய்வோம் என எதிர்பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, கடுமையாக ஐயாவின் வழிகாட்டுதலில் உழைத்தோம்.

அதன்பிறகு இந்தக் கல்வி நிறுவனஙகளுக்கு ஏணிதான்!

1995 –இல் 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மூன்றே வருடங்களில் 1300 பேர்கள் சேர்ந்தனர்! எங்களது பொறுப்பு அதிகமாயிற்று.

அந்த சமயம் அருகில் பாய் மிக ஆரம்பிக்கலாம் என்று 5 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருந்தோம். ஆனால் மில்லிற்கான வசதியும் செக்யூரிட்டியும் அங்கு இல்லை. என்று லோன் தர மறுத்துவிட்டனர். பணத்தை வீணாக –நிலத்தில் போட்டு சும்மா வைத்திருக்கிறோமே என்கிற கவலையில் இருந்தபோது.

பாய் மில் இல்லாவிட்டால் என்ன –அந்த இடத்தில் என் உயர்கல்வி ஆரம்பித்து நடக்க்க் கூடாது என்கிற சிந்தை ஐயாவிற்கு எழுந்தது. பாய் மில்லிற்கு லோன் கிடைக்காதது கூட நன்மைக்கே என்று தோன்றிற்று.

எப்போதுமே எந்த ஒரு தோல்வியும் –தடங்கலுமே ஐயாவைப் பாதித்ததில்லை. தோல்வியை மறந்து –வெற்றி பெற வைக்க வேறு மாதிரி யோசிப்பார். அதில் வெற்றியும் காணுவார்.

பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளில் அப்போது மகளிர் கல்லூரி இல்லை. பெண்கள் படிக்க வேண்டும் என்றால் திருச்சிக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு போட்டாப் போட்டி, இடம் கிடைப்பதும் அரிது. தினம் போய் வர முடியாது. விடுதியில் சேர்க்க வேண்டும் அதற்கு அதிகச் செலவாகும்.

இதையெல்லாம் யோசித்துக் கிராமப்புற மக்கள் பெண்களைக் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாமல் இருந்தனர். அருகில் கல்லூரி என்றால் எல்லோரும் படிக்க வைப்பர்.

பெண்களுக்குக் கல்வி முக்கியம். வேலைக்குப் போகிறார்களோ இல்லையோ –அவர்கள் பெறும் கல்வி –நாளை குடும்பத்தை –பிள்ளைகளை வழி நடத்த உதவும். அவர்களின் அறிவு வளரும்போது –உலகம் புரியும். அது கணவனுக்கும் பலனுள்ளதாக இருக்கும். அதனால் பெண் கல்வி அவசியம். அதற்கு நம் பங்காக இருக்கட்டும் என்று ஐயா 1995 –இல் பெண்கள் கல்லூரிக்கு மனு போட்டார்.

அந்த மனு –காரணமில்லாக் காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சளைக்காமல் மறு வருடமும் மனு செய்தார். அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து –மகளிர் கல்லூரி ஆரம்பிக்க அங்குப் போதுமான வசதிகள் உள்ளன என அறிக்கை சமர்ப்பித்தனர். இருந்தும்கூட எந்தத் தகவலும் இல்லை. இரண்டு மாதங்கள் அந்த ஃபைல்கள் அலுவலகத்தில் தூங்கின. இவர்களும் அங்குப் போய் தவமாய்த் தவமிருந்தனர்.

மேலதிகாரியை அணுகிய போது ``பெரம்பலூர் மிகவும் பின் தங்கிய பகுதி. அங்குக் கல்லூரி, அதுவும் பெண்கள் கல்லூரி ஆரம்பித்து நடத்துவது என்பது இயலாத காரியம். மாணவிகள் கிடைப்பதும் சிரமம்’’ என்றார்.

``இல்லை. மாணவிகள் இந்தப் பகுதியில் போதுமான அளவில் உள்ளனர். நிச்சயம் சேருவார்கள்.

``அப்படியே சேர்ந்தாலும் கல்லூரிக் கட்டணம் செலுத்தக்கூடிய அளவில் கிராம மக்கள் இருக்கிறார்களா? விஷப்பரீட்சை வேண்டாம். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். வீணாக ஆரம்பித்து நஷ்டப்படாதீர்கள். உங்கள் உழைப்பு –முயற்சி –பணம் விரயமாகிவிடக்கூடாது.

``பரவாயில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. நஷ்டம் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அப்படியே வந்தாலும் கவலையில்லை. மகளிர் கல்லூரி ஆரம்பிக்கிற முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அனுமதி தாருங்கள்!’’

``அனுமதி தருகிறேன். ஆனால் நன்றாக யோசியுங்கள். திருச்சி, சமயபுரம் போன்ற பகுதியில் ஆரம்பிக்கலாமே. உங்களுக்கும் ரிஸ்க் குறைவு. நஷ்டம் வராது.’’

``நஷ்டத்தைப் பற்றி கவலை இல்லை. எனக்கு ஊர்ப் பற்று அதிகம். எல்லோரும் டவுன் பக்கமே போய்விட்டால் கிராமங்கள் வளர்வது எப்போதும்? எப்படி வளரும்? கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறோம். ஆனால் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தால் எப்படி? என்னவானாலும் சரி –என் சொத்தை விற்றாவது கல்லூரி நடத்துவோம்! மகளிர் கல்லூரி எண்ணம் வந்ததே –இந்தப் பகுதி மக்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் –பணம் சம்பாதிப்பதற்காக அல்ல!’’

``சரி! உங்கள் இஷ்டம், நஷ்டம் உங்களுக்குக் கவலையில்லாம லிருக்கலாம். ஏதாவது காரணத்தால் கல்லூரியை மூடினீர்கள் என்றால் மாணவிகளின் படிப்பு என்னாவது? பெற்றோர்கள் போராடுவார்கள். அரசுக்கு கெட்ட பெயர் வரும்!’’ என்று அவர் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தார்.

அனுமதி தருவதாகத் தெரியவில்லை. ஐயாவுக்கு வைராக்கியம் அதிகமாயிற்று. அதிகாரிக்கு வேண்டிய ஒருவரைப் பிடித்து அவர் மூலமும் கட்டாயப்படுத்திப் பார்த்தார். பலனில்லை.அவர் பிடி கொடுக்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் விடாமல் அவரது அலுவலகத்திற்குப் படையெடுத்ததால் ``இவர்களுக்குப் பெரம்பலூரில் கல்லூரி ஆரம்பிக்க அனுமதி தரலாம் –ஆனால் நடத்த இயலாமல் போனால் எக்காரணம் கொண்டும் அரசாங்க எடுத்து நடத்தாது’’ என்று பரிந்துரைத்தார்.

அதன்பின் அந்தக் கண்டிஷனுடன் அனுமதி கிடைத்தது. 1996 –இல் மகளிர் கல்லூரி ஆரம்பித்தபோது முதல் வருடம் 42 பேர்கள்தான் சேர்ந்தனர்.

கிராமப் பகுதிகளில் மாணவிகளைச் சேர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. படிப்பே வேண்டாம் –கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும். கடமை முடிந்தது என்று இருப்பவர்களை –கல்லூரிப் படிப்புக்கு அனுப்பச் செய்வது சிரமமாகத் தானிருந்தது. கல்லூரிக்கு அனுப்பினால் பெண்கள் கெட்டுப்போவார்கள். கர்வம் வந்து விடும். மூன்று நான்கு வருடம் கல்யாணம் தள்ளிப்போய் விடும் என்று பயந்தனர்.

இதெல்லாம் ஐயா எதிர்ப்பார்த்துதான், பெண்கள்ப் படிக்க வைப்பது சவாலான காரியம்தான் அது தெரியும்-அதையெல்லாம் தாண்டி வெற்றி பெறணும். சோர்ந்து போகக்கூடாது. அதிகாரியிடம் போராடி அனுமதி பெற்றிருக்கிறோம். பின்வாங்கக் கூடாது என வைராக்கியமாயிற்று.

பெரம்பலூரைச் சுற்றியுள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்குப் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்து ஆதரவு கேட்டோம். இறுதிப் பரீட்சை முடியும் தருணத்தில் –அவர்களும் ஆதரவுக் கரம் நீட்டினர். டவுனில் இடம் கிடைப்பது கஷ்டம். செலவும் அதிகம். இங்கே நன்கொடை கிடையாது. கட்டணமும் குறைவு. பயணமும் எளிது நல்ல ஆசிரியர்களை வைத்து அதிகக் கவனிப்பு கிடைக்கும் என்பதை எடுத்துச் சொன்னோம்.

தொடரும்...





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக