முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
அந்த சமயமும் டிசம்பர் 31 குடும்பத்தினருடன் காரில் கிளம்பினார். வழியில் பள்ளி –கல்வித் துறையில் அப்ளிகேஷனைக் கொடுத்து விடுங்கள் என்று மனுவை நிரப்பி புதுக்கோட்டை கருப்பையா கொடுத்துவிட்டார்.
``ஐயோ... நான் எதுக்கு? நீங்களே போய் மனுவைக் கொடுக்கலாமே!’’
``இல்லை. பள்ளி ஆரம்பிக்கிறவர்தான் நேரில் போய் மனு தரணும். நீங்களே போங்க!’’
``எனக்கு அங்கு யாரையும் –எதையும் தெரியாதே!’’
``தெரியாட்டி என்ன –அதிகாரியிடம் நான் ஏற்கனவே எல்லாம் பேசிவிட்டேன். நீங்கள் போய் கொடுத்தாப் போதும்!”
சீனிவாசன் சரியென்று குடும்பத்துடன் காரில் கிளம்பினார்.
மதுரை.
அந்த அலுவலகத்தில் காரைச் செலுத்தி நிறுத்த –செக்யூரிட்டி வந்து ``யார் சார்... என்ன வேணும் உங்களுக்கு?’’ என்று விரட்ட இவரது தன்மானம் வெகுண்டெழுந்த்து. இவன் யார் என்னை விரட்ட என்று ``போய் அதிகாரியை அழைத்து வா’’ என்று உத்தரவிட்டார்.
இவர் ஏதோ பெரிய அதிகாரி என நினைத்து –பயந்து அவன் ஓடினான். சீனிவாசன் பொறுமையில்லாமல் ஹாரனடித்து அவசரப்படுத்தவே –சம்பந்தப்பட்ட அதிகாரியும் மாடியிலிருந்து அரக்கப்பரக்க ஒடிவந்தார்.
காலம் கெட்டுக் கிடக்கிறது. எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நமக்கேன் வம்பு! இவர் யாரோ –எவரோ! ஆளுங்கட்சிப் பெரிய புள்ளியாய் இருக்கலாம். அரசியல்வாதி! மந்திரிக்கு வேண்டியவரோ என்னவோ?
யோசனையுடன் அவர் காரிடம் வர,`` இங்கே பள்ளி கல்வித்துறை அதிகாரி யார்...?’’ என்று சீனிவாசன் அதட்டினார்.
``நான்தான் சார்!...
``இந்தா இதுல அப்ளிகேஷன் இருக்கு. வாங்கிவிட்டு வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சு முடி!’’
``ஐயா ...நீங்க!’’
``நானா? கருப்பையா சார்! சொல்லலியா...? இல்லை மறந்து போச்சா? பெரம்பலூரில் புதிதாய்ப் பள்ளி ஆரம்பிக்கணும்னு சொல்லியிருந்தாரில்லே –சீனிவாசன்! அது நான் தான். இந்தா பிடி! எனக்கு நேரமாகுது’’ என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு விருட்டென்று பறந்து போனார்.
அந்த அதிகாரிக்கு மகா கோபம்! எரிச்சல்! இந்தாள் என்ன மனுஷன் அனுமதி கேட்க வந்தவனுக்கு இத்தனை அதிகாரமா.... எப்படி நடந்துக்கணும் ...அதிகாரிட்ட எப்படிப் பேசணும்னு தெரியலை –சரியான காட்டானாயிருப்பான் போலிருக்கே! இந்தாளெல்லாம் பள்ளி ஆரம்பிச்சா வாழுமா? வெளங்குமா....
அந்த அதிகாரி திரும்ப –நாலுவார்த்தை திட்டலாம் என்று சுதாகரிப்பதற்குள் இவர் காம்பவுண்டை கடந்திருந்தார்.
அதிகாரியிடம் பணிவு காட்ட வேண்டும்! கூழைக் கும்பிடு! அவரவர்கள் அப்பாயிண்ட்மென்ட் கேட்டுச் சந்திப்பிற்குக் காத்திருக்கும்போது தான் இப்படி நடந்து கொண்டோமே –என்று சீனிவாசனுக்கு அப்போது தப்பாகப் படவில்லை.
இப்போது அந்த `அப்பாவி’அறியாமையை நினைத்துச் சிரிக்கிறார். ``அதெல்லாம் ஒரு காலம்! பருவம்! வெளி உலகே தெரியாத –பக்குமின்மை!’’
நமக்கு ஆர்வம் தாங்கவில்லை. ``எல்லாம் சரி இத்தனைக்குப் பிறகும் எப்படிப் பள்ளி ஆரம்பிக்க பர்மிஷன் கிடைத்தது.
``வேறு யாரோன்னா –உடனே பழிவாங்கி –இழுத்தடித்து- அனுமதி கொடுத்திருக்க மாட்டாங்க. அவர் அந்தக் கருப்பையா சாருக்கு வேண்டியவர்ங்கிறதால உடனே அவருக்கு போன் போட்டிருக்கார். ``என்ன சார் இது –ஒரு மரியாதை தெரிய வேணாம் –இவருக்கெப்படி நான் அனுமதி தருவதுன்னு’’ கேட்டிருக்கார்.
அவரும் எனக்காக வருத்தம் தெரிவித்து, ``சீனிவாசன் நல்லவர். விபரமில்லாம அப்படி நடந்துகிட்டிருப்பார். அதைப் பெரிதாய் எடுத்துக்க வேணாம்’’ணு சொல்லிவிட்டு என்னிடம் `கிளாஸ்’ எடுக்க ஆரம்பித்து விட்டார்.
சரி, அனுமதி கிடைக்கப் போவதில்லை. படிப்பறிவில்லாததின் காரணமாய் ஆரம்பமே சரியில்லை போலிருக்கிறதுன்னு நினைச்சேன் ஆனால் பயந்தபடியில்லாம பர்மிஷன் கிடைச்சது.
எனக்குள் ஒரு உறுத்தல். அவரிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதுன்னு உணர்ந்தேன். ஆனாலும் கூட! `இந்தாள் எங்கே பள்ளி ஆரம்பிக்கப் போறான் –எப்படி நடத்தப் போறான் ‘ என்கிற அவரது அவநம்பிக்கையைப் போக்கணும் –ஆரம்பிச்சுக் காட்டணும்னு வேகத்தோட வேலைகளைக் கவனிச்சோம், வெற்றியும் கண்டோம்!’’ என்று மெய் சிலிர்க்கிறார் சீனிவாசன்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இவருக்கு எப்போதும் எதிர்மறையான உந்துசக்தி வாய்த்திருக்கிறது. நேராய்த் தட்டிக் கொடுத்து ஊக்கம் கிடைப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் -`இவன் என்னத்தைக் கிழிக்கப் போகிறான்’ என்கிற ஏளன –ஏச்சு –பேச்சு –இவருக்கு அதிக ஊட்டச்சத்து கொடுத்திருக்கிறது.
இதில் என்ன விஷேசம் என்றால்-
1994 –இல் முதன் முதலில் பள்ளி துவங்கும்போது –சீனிவாசன் அந்த சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து வந்தார். துவக்க விழாவை நடத்தினதே அவர்தான்!
பெரம்பலூரில், அதுவும் வறட்சியான –பொருளாதாரத்தின் பின்தங்கிய- கல்வி அறிவில்லாப் பகுதியில் –ஆரம்பித்த தினத்தன்றே 320 பிள்ளைகள் சேர்ந்திருந்த விவரம் அந்த அதிகாரியை வியப்படைய வைத்தது.
(11)
அந்த மெட்ரிக்குலேஷன் பள்ளி ஐயாவின் வீட்டுக்கு எதிரிலேயே இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் பள்ளியில் பிள்ளைகள் படிப்பதும் விளையாடுவதும் தெரியும்.
அதை ஐயா அப்படியே பார்த்துக் கொண்டு நிற்பார். பிள்ளைகளைப் பார்க்கப் பார்க்க அவருக்குச் சந்தோஷமாயிருக்கும். மேலும் மேலும் கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஊக்கம் அவருக்குக் கிடைக்கும்.
பள்ளியிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, தகுதியான ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குவது இவரது சிறப்பு. அதே சமயம் மாணவர்களிடம் டொனேஷன் பெறுவதில்லை கல்விக் கட்டணமும் குறைவாகத்தான் பெறுகிறார்கள்.
பேராசைப்படாமலிருந்தால் சீராக வளரலாம் என்பது இவரது அசைக்க முடியாத அனுபவப்பூர்வ நம்பிக்கை.
அதன்பிறகு படிப்படியாய் ஆரம்பித்து இன்று தன்லட்சுமி சீனிவாசன் குழுமத்தில் 17 நிறுவனங்கள்!
இடைப்பட்ட காலத்தில் வெடிமருந்துத் தொழில் நல்ல லாபம் கிடைக்கிறது எனக் கேள்விப்பட்டு உரிமம் பெற்றார். அந்த நேரம் அவருக்கு ஒரு வெறி. தன்னால் எந்தத் தொழிலையும் செய்ய முடியும் என்கிற மமதை இருந்த நேரம் அது.
வெடிமருந்திற்காகப் பெரும் செலவில் கொடவுன் கட்டினார். ஆனால் அதன்பிறகு –வெடிமருந்து என்பது –அழிக்கும் உபகரணம். எத்தனை லாபம் வந்தாலும் சரி அந்தத் தொழில் நமக்கு வேணாம் என்று அதிலிருந்து பின்வாங்கினார். அதற்காக செய்த செலவு மெனக்கெடு –உழைப்பைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
அதே சமயம் –எந்த ஒரு நல்ல காரியத்தில் இறங்கினாலும் அதிலிருந்து பின்வாங்குவதில்லை. தொட்ட காரியத்தை முடிக்காமல் இவருக்குத் தூக்கம் வராது. சதா அதே நினைவு! அதே கனவு!
தொடரும்...
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக